2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும், 557 நகரங்களில் இன்று நடக்கிறது.
இந்த தேர்வை, தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுத உள்ளனர். பிற்பகல் 2:00 முதல் 5:20 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்புகளுக்கும் சேர்த்து நீட் நடத்தப்படுகிறது.
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என, 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என, மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண், 'நெகட்டிவ்' என்ற அடிப்படையில் குறைக்கப்படும்.
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவ - மாணவியர், 'ஹால் டிக்கெட்'டில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல், வானிலை போன்றவை கருதி, முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு செல்லும் வகையில் திட்டமிடுவது அவசியம்.
தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1:30 மணிக்கு முன் வருகை தர வேண்டும். அதன்பின் வரும் மாணவர்கள் மையங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்கெட் மற்றும் அடையாளச் சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி கிடையாது.
தேர்வர்கள், 'மெட்டல் டிடெக்டர்' வாயிலாக சோதனை செய்யபடுவர். எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம். தேர்வு துவங்கி, முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் கழிப்பறை செல்ல அனுமதி கிடையாது.
தேர்வு மையங்களுக்குள் பேப்பர், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, பர்ஸ், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்ல முடியாது.
பாரம்பரிய மற்றும் கலாசார, மதம் சார்ந்த ஆடை அணிந்து வருவோர், சோதனைக்கு வசதியாக பகல் 12:30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்.
முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.