பாரம்பரிய மருத்துவத்தில் சொல்லப்படும் வாத, பித்த, கப தோஷங்களில் பித்தம் கோடையில் அதிகரிக்கும்.

வெயிலில் சென்றாலே களைப்பு வரும். உடலை குளிர்விப்பதற்காக வெளியேறும் வியர்வையில், உப்பும் சேர்ந்தே வெளியில் வருவதால், சோடியம், குளோரைடு போன்ற தாதுக்களின் இழப்பு ஏற்படும்.

இதை ஈடு செய்யவே உப்பு, சர்க்கரை கலந்த நீரை அருந்தலாம். மேலும் சூரிய வெப்பக் கதிர்களில் இருந்து பாதுகாக்க, சரியான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும்.

காலை உணவாக ராகி கஞ்சியில் சிறிய வெங்காயம் சேர்த்து குடிக்கலாம். பழைய சோறு சாப்பிடலாம். அரிசி, கோதுமை, கம்பு என்று விருப்பமான தானியத்தில் கஞ்சி காய்ச்சி குடிக்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய புதினா, மல்லி தழை சேர்த்து நீர் மோர் குடிப்பது முக்கியம்.

'கெபைன்' உள்ள காபியை தவிர்த்து டீ குடிக்கலாம். உடலில் உள்ள தாதுக்களை அதிக அளவில் வெளியேற்றும் தன்மை காபிக்கு உள்ளது.

சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறு, கரும்பு சாறு, நுங்கு, இளநீர், தேங்காய் வழுக்கை சாப்பிடலாம்.

பித்தம் அதிகமாகும் காலம் என்பதால், புளிக்க வைத்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பதும் நல்லது.