குட்டீஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி : பீட்ரூட் பிரியாணி
தினம் ஒரு புதுமையான மெனுவை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் டிபன் பாக்ஸ் காலியாகிவிடும். உங்களுக்காக ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் பிரியாணி ரெசிப்பி இதோ…
இதெல்லாம் தேவை : பீட்ரூட் - ஒன்று, பாசுமதி அரிசி - ஒரு கப், கொத்தமல்லி, புதினா இலைகள் - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு இஞ்ச் நீளத் துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 3, நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: முதலில் பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும். அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
அவை எல்லாம் நல்லா வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றவும்.
நன்கு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவைத்தால் சுவையான பீட்ரூட் பிரியாணி ரெடி. இதனுடன் அவித்த முட்டை, மாதுளை தயிர் ரைத்தா கொடுக்கலாம்.