மார்பக இம்பிளான்ட்டுகள் பாதுகாப்பானதா?
மார்பக இம்பிளான்ட் (Breast augmentation) அழகு அறுவை சிகிச்சைகளில் முக்கியமான ஒன்றாகும்.
சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க இச்சிகிச்சையை செய்கின்றனர். இதன் சாதக, பாதகங்கள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?
மார்பக இம்பிளான்டுகள் 2 வகைப்படும். சலைன் நிரப்பப்பட்ட சிலிக்கான் ஷெல் கொண்டு தயாரிக்கப்படும் இம்பிளான்ட் முதல் வகை. முழுவதும் சிலிக்கானால் ஆன இம்பிளான்ட் இரண்டாம் வகை.
சிலிக்கான் இம்பிளான்ட் பொருத்தப்பட்டால், அது இயல்பான மார்பின் தோற்றத்தில் இருப்பதால் இதனைப் பொருத்திக்கொள்ள பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தொலைக்காட்சி மற்றும் சினிமா கலைஞர்கள் துவங்கி பல பெண்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.
இந்த இம்பிளான்ட்டுகள் வாழ்நாள் முழுக்க மார்பகத்தின் அடியில் இருக்காது. இவற்றின் ஆயுட்காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகள்தான்.
பின்னர், இவற்றை நீக்கிவிட்டு புதிய இம்பிளான்ட்டுகளை பொருத்திக் கொள்ளவும் அறுவை சிகிச்சை உண்டு.
ஆனால், இவற்றை சரியாகப் பொருத்த, டாக்டர்களுக்கு போதிய பயிற்சியும், அனுபவமும் தேவை. தவறாகப் பொருத்தினால் இதனால் பெண்களுக்கு பல உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது அழகு அறுவை சிகிச்சைகளில் பலவித நவீன மேம்பாடுகள் வந்துவிட்டன. மார்பக அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு வார கால ஓய்வு தேவை. அதன் பின் பெண்கள் வேலைக்குச் செல்லலாம்.