சிறுதானிய உணவுகளை சாப்பிடத் துவங்கும் முன்...
புரதம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம். வைட்டமின்கள், நார்ச்சத்து, மாங்கனீஸ், தாதுக்கள் என பல்வேறு ஊட்டச்சத்துகள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன.
பொதுவாகவே சிறுதானியம் உட்பட அனைத்து உணவுக்கும் தனிப்பட்ட குணம் உண்டு. உதாரணமாக, அதிகளவு சோளம் சாப்பிட்டால் சருமத்தில் நமைச்சல், அரிப்பு ஏற்படக்கூடும்.
தினையில் உள்ள கோய்ட்ரோஜன் என்ற பண்புகள், தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை தடுக்கிறது. வறண்ட சருமம், பதற்றம், மனச்சோர்வு, மெதுவான சிந்தனையை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இவற்றை முதன் முதலாக உட்கொள்ளும்போது, தனித்தனியாக சமைத்து சாப்பிடவும். அப்போதுதான், ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன வகை சிறு தானியம் என எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
முதன் முதலாக சிறு தானியங்கள் சாப்பிட துவங்கும்போது வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் உட்கொள்ள வேண்டும். பின், படிப்படியாக நாட்களை அதிகரிக்கலாம்.
இதனால் உடல் ஒவ்வாமை, வேறு பிரச்னைகள் எழுகிறதா என எளிதாக கண்டுபிடிக்கலாம். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் கம்பு, சோளம் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றில் மண் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளதால், நன்கு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். கம்பை அரைத்தவுடன் உடனடியாக பயன்படுத்தாவிட்டால், காரல் தன்மை உண்டாகும்.
வயதானவர்களுக்கு இதைத் தரும்போது கூடுதலாக தண்ணீர் சேர்த்து குழைவாக வேக வைத்தால், அஜீரணம் போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
எடையை குறைக்கவும், நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் சிறுதானியங்கள் உதவுகின்றன. இருப்பினும், அலர்ஜி, உடலில் நாள்பட்ட பாதிப்புகள் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.