தினமும் எவ்வளவு தேன் சாப்பிடலாம்?
இயற்கை நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் கலந்த வரம் தேன். பழங்காலத்தில் இருந்தே மருத்துவ ரீதியில் தேனின் பயன்பாடு உள்ளது.
நுண் கிருமிகளை எதிர்த்து போராடும் இதன் வீரியம், ஆன்டிபயாடிக் மருந்துகளையே பின்னுக்கு தள்ளியதும் உண்டு.
உடலிலுள்ள நோய் எதிர்ப்பு செல்களைத் துாண்டி, புதிய செல்களை உருவாக்க தேன் உதவுகிறது. கிருமிகளால் ஏற்படும் நச்சுத் தன்மையையும் வெளியேற்றும்.
செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாவதற்கும், இரைப்பை புண், மலச்சிக்கல் போன்ற சரி செய்யும் திறன் தேனுக்கு உள்ளது.
பசியைத் துாண்டும் 'கிரெலின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
நல்ல துாக்கத்தைத் தரும் 'மெலடோனின்' ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும்.
கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது, கேன்சர் செல் வளராமல் தடுப்பது, ரத்த சர்க்கரை அளவை சீராக்குவது என்று பல வியப்பான பலன்கள் தேனுக்கு உள்ளது.
இருப்பினும், வெகு அபூர்வமாக சிலருக்கு தேன் சாப்பிடுவதால், ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யும். வயிற்றுப்போக்கு, தலை சுற்றல், சீரற்ற இதயத் துடிப்பை எற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் 15 - 30 மில்லி தேன் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.