புரதம் சார்ந்த இணை உணவுகள் ஆரோக்கியமானதா?

கடந்த சில ஆண்டுகளாக புரத உணவிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே, புரதம் சார்ந்த இணை உணவுகள் பல வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றன.

சிலர் புரதம் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தவறான புரிதலில், வழக்கமான உணவுடன் இணை உணவையும் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது அதிகமான கலோரியாகவே கணக்கிடப்படும்.

இப்படி தேவைக்கு அதிகமாக சாப்பிடும் எந்த உணவும் கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுவதால், உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இணை உணவுகளில், புரதத்துடன், செயற்கை சுவையூட்டிகள், வேதிப் பொருட்கள், நிறமிகள் சேர்ப்பதால், செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சிதைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகப்படியான புரதம் மலச்சிக்கலை ஏற்படுத்தும். புரதம் சாப்பிடும் போது தாகம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதனால் நார்ச்சத்து, தண்ணீர் அதிகம் சாப்பிட வேண்டும்.

புரதம் செரிமான மண்டலத்தில் அமிலங்களை அதிகம் சுரக்கச் செய்வதால், தாதுக்கள் அதிகமாக வெளியேறும். குறிப்பாக கால்சியம் பற்றாக்குறை ஏற்படலாம். சிலருக்கு கீழே விழுந்தாலும் எலும்பு உடையலாம்.

ஆரோக்கியமாக வளரும் குழந்தைக்கு, அதிகப்படியான புரதம் அவசியம் இல்லை. வழக்கமாக தரப்படும் உணவிலேயே தேவையான சக்தியும், புரதமும் கிடைத்து விடும்.

வழக்கமான உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு வெறும் புரதம் மட்டுமே தர வேண்டாம். கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்துக் கொடுத்தால் மட்டுமே புரதம் தன் வேலையை சரிவரச் செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.