இன்று இந்திய ராணுவ தினம்!

நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜன., 15ம் தேதி இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ராணுவ தலைமை பொறுப்பு அவர்கள் வசம் தான் இருந்தது. 1949 ஜன., 15ல் இப்பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார்.

இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாக ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

தன்னலம் பார்க்காமல் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எல்லையில் எந்நேரமும் விழிப்புடன் பணியாற்றும் நம் ராணுவ வீரர்கள் தான் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள்.

உயரமான மலைகள், பனி குன்றுகள், நடுங்க வைக்கும் குளிரிலும் குடும்பத்தை பிரிந்து தனிமையான சூழல் என பல இன்னல்களுக்கும் மத்தியில் புன்னகையுடன் போர் முனையில் பணியாற்றுகின்றனர்.

எல்லையில் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் ராணுவம் ஈடுபடுகிறது.

நாம் வாழ, அவர்கள் உயிரையும் தியாகம் செய்கின்றனர். அவர்களுக்கு நாம் என்றும் நன்றிக்கடன்பட்டவர்கள்.