மன அழுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, பிடித்த உணவை உண்பது மனதுக்கு ஆறுதல் தரலாம். ஆனால், இது உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதுவும், அதிக சுவைமிக்க உணவுகளான நொறுக்குத் தீனி, சிப்ஸ், பிஸ்கட் ஆகியவற்றில் கொழுப்புச்சத்து மிக அதிகம்.

அதிக கொழுப்புச்சத்து மிகுந்த இந்த உணவுகள், சாதாரண நேரங்களிலேயே தீங்கு தரும். மன அழுத்தத்தில் இருக்கும்போது உண்டால் உடலுக்கு மிகவும் கேடு என ஆய்வுகள் கூறுகின்றன.

மன அழுத்தத்தின் போது கொழுப்பு மிகுந்த உணவு உண்பது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்; மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனைக் குறைக்கும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளைக்குச் சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், அது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். அதோடு மூளை சார்ந்த பிரச்னைகளையும் உருவாக்கலாம்.

மன அழுத்தத்தின் போது, இதயத்துடிப்பு அதிகரிக்கும்; மூளைக்கு பாயும் ரத்தம் அதிகரிக்கும். அப்போது, கொழுப்புச்சத்துள்ள உணவை உட்கொண்டால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

ரத்த ஓட்டம், 1 % பாதிக்கப்பட்டால் கூட, அது இதயநோய்கள் ஏற்படும் வாய்ப்பை, 13 % அதிகரித்துவிடும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாலிஃபீனால்கள் அதிகமுள்ள கோகோ, பெர்ரி, திராட்சை, ஆப்பிள் முதலிய உணவுகளை உண்ணும்போது இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை.

ஏற்கனவே இதயநோய் உள்ளவர்கள் மன அழுத்தத்தின் போது எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது மருத்துவ ஆய்வாளர்களின் அட்வைஸாகும்.