அதிகரித்து வரும் இளம் வயது கர்ப்பம்... 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரிப்பு
தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம், இளம் வயதில் கர்ப்பம் அடைவது அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் பாலியல், இனப்பெருக்கம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இளம் வயதில் கர்ப்பமடைவது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2019 - 20ல், 11,772 ஆக இருந்த இளம் வயது கர்ப்பம், 2023 - 24ல், 14,360 ஆக உயர்ந்துள்ளது என, பொது சுகாதாரத்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இளம் வயதில் கர்ப்பமாவது, 20 % அதிகரித்துள்ளது. கடந்தாண்டு கருத்தரித்த தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில், 1.5 % இளம்வயது கர்ப்பம்.
நாகை, தேனி, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இளம் வயது கர்ப்பமடைதல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதற்கு, குழந்தை திருமணங்கள், பாலியல் குற்றங்கள், பள்ளி இடைநிற்றல் அதிகரிப்பு, வறுமை, பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.
சட்டத்திற்கு புறம்பாகவோ, போலி டாக்டர்களிடம் சென்றோ கருகலைப்பு செய்வது, அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இதற்கான காரணங்களை ஆராய்ந்து, இளம் வயது கர்ப்பமடைதலை தடுக்க வேண்டும்.