ஆரோக்கியமான வகையில் எடை கூடச் செய்யும் பனங்கிழங்கு!
தற்போது சாலையோரங்களில் அதிகம் நம் கண்ணில் பனங்கிழங்குகள் தென்படுகிறது. பருவகாலம் துவங்கிவிட்டதால், அதை வாங்கி சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவர்.
குளிர்ச்சிச் தன்மை உள்ள பனங்கிழங்கில், நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலை தீர்க்கவும் உதவுகிறது. உடல் எடையை ஆரோக்கியமுடன் அதிகரிக்கிறது.
பனங்கிழங்கை வேக வைத்துச் சிறு, சிறு துண்டாக நறுக்கிக் காய வைத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்துச் சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். இரைப்பை உள்ளிட்ட உடல் உறுப்புகள் வலுவடைகிறது.
பனங்கிழங்கு வாயு தொல்லை ஏற்படுத்தக் கூடியது. எனவே, பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிடலாம்.
நிலத்திலிருந்து பனங்கிழங்கைப் பிரித்தெடுக்கும் போது, விதையிலிருந்து தவின் கிடைக்கும் (விதையின் நடுவில் உள்ள பூ). இதை சாப்பிட வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி குணமாக உதவுகிறது.
பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.