வாங்க செய்யலாம் அசத்தலான கோதுமை முட்டை பரோட்டா

1.5 கப் கோதுமை மாவுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். பின், (பரோட்டாவுக்கு என்பதால்) பெரிய பெரிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

ஒரு பவுலில் வெங்காயம் மற்றும் ப. மிளகாய் தலா 1, சிறிது கொத்தமல்லி இலையை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதில், 2 முட்டையை உடைத்து ஊற்றவும்.

மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் குருமிளகுத்தூள் தலா 1/4 டீஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.

பிசைந்த மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போன்றே தேய்க்கவும். பின், சிறிது நெய் அல்லது எண்ணெயை அதில் விட்டு, சதுரம் அல்லது முக்கோண வடிவில் மடித்து, மீண்டும் மிருதுவாக தேய்க்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்தவுடன், சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்த மாவை போடவும். சிறிது வெந்தவுடன் மறுப்பக்கம் திருப்பிப் போட்டு, அதன் ஓரத்தை லாவகமாக பிரிக்கவும்.

அதில், கலக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றி, பரப்பி விட்டு மீண்டும் மேல்பகுதியை மூடவும். ஓரிரு நிமிடங்களில் லாவகமாக திருப்பிப்போட்டு, இரு பக்கமும் நன்றாக, பொன்னிறமாக வேக விடவும்.

இப்போது மணக்க மணக்க சுவையான மற்றும் ஆரோக்கியமான முட்டை பரோட்டா ரெடி. காலை பிரேக்பாஸ்ட்டுக்கு ஒரு முட்டை பரோட்டா சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.

இதற்கு சைடு டிஷ்ஷாக நறுக்கிய வெங்காயத்துடன் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது எலுமிச்சை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால், சுவை அள்ளும்.