பரம்பிக்குளம் சுற்றுலா... கொண்டாடி மகிழ ஏற்ற இடம் !

வார இறுதியில் குழந்தைகளுடன் ஓய்வெடுக்கச் சரியான இடம் தேடி ஏங்குபவர்கள், தங்களது செக் லிஸ்டில் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தை டிக் செய்யலாம்.

ஆண்டுதோறும் இங்கு சென்றாலும் புது அனுபவம் தந்து கொண்டே இருக்கும். அமைதியான சோலைவனத்தின் நடுவே தூக்கம், திகிலூட்டும் டிரெக்கிங் என நினைவுகளை அசைபோட ஏற்ற இடம் இது.

அடர்ந்த வனம், குயில்களின் சத்தம், உடலை வருடும் காற்று என இயற்கை எழில் கொஞ்சும் பரம்பிக்குளம், புலிகள் காப்பகத்தை நாம் கதையாகவோ, வீடியோவாகவோ பார்த்தால் உணர முடியாது.

கேரள மாநிலம் சிற்றூர் தாலுகாவில், ஆயப்பாதை எனும் ஊரில் அமைந்துள்ளது இது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி, டாப்சிலிப் வழியாகவும் செல்லலாம்.

டூவீலர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், கார், வேன் போன்ற வாகனங்களில் செல்லலாம். அங்கு, மலைமேல் புலி நம்மை வரவேற்கும். பயந்து விடாதீர்கள்; புலி போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த வனப்பகுதியில் பசுமையை ரசித்தபடி 3 கி.மீ., தூரம் சென்றால் அடர் காட்டினுள் சவாரி துவங்கும். அங்கு வனத்துறை சார்பில் இயக்கப்படும் வாகனத்தில் தான் பயணிக்க வேண்டும்.

இந்த சரணாலயம் 614 கி.மீ சதுர பரப்பளவு கொண்டது. சுற்றிப்பார்க்க மாலை நேர டிரெக்கிங் ஏற்றது. அப்போது தான் வனவிலங்குகள் அனைத்தையும் பார்க்க முடியும்.

பயணத்தின் போது அடர் வனப்பகுதியில் உள்ள புலி, யானை, மான், முதலை, நீளவால் குரங்குகள், மயில்கள், காட்டெருமை மற்றும் மலைப்பாம்புகளைப் பார்க்கலாம்.

400 ஆண்டுகள் பழமையான மரத்தையும் இங்கு பார்க்கலாம். இதை அண்ணாந்து பார்ப்பது ஒரு அலாதியான அனுபவமாகும்.

தண்ணீரில் மூங்கில் ராஃப்டிங் செய்வது சாகசப்பிரியர்களுக்கு உற்சாகம் தரும்.

உங்கள் பட்ஜெட்டுக்கேற்ப ஐ-லேண்ட், மர வீடு, காட்டேஜ் என பல வகையான தங்கும் விடுதி வசதியும் இங்கு உள்ளன.