நீரிழிவு பாதிப்புக்கு வழிவகுக்கும் பிசிஓடி

2 ஆண்டுகளுக்கு முன், 'இன்டர்நேஷனல் டயாபடிக்ஸ் பெடரேஷன்'- ஐ.டி.எப்., என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வில், 7.46 கோடியாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது.

ஐ.சி.எம்.ஆர்., பங்களிப்புடன் கடந்த ஆண்டு வெளியான ஆய்வறிக்கையில், 2 கோடி பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்; அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் 13 கோடிப் பேருக்கு பாதிக்கும் என தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல் காலகட்டத்தில், தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஸ்டிராய்டு மருந்துகள் தந்ததால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, பலரும் நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதய நோயாளிகளில் பாதிக்கும் மேல் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களே. ஹார்ட் அட்டாக் வந்தால் அறிகுறிகள் வெளியில் தெரியாது. இதய தசைகள் செயலிழந்து, மூச்சு திணறல் ஏற்பட்ட பின் தான் டாக்டரிடம் செல்வர்.

நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்களுக்கு ஒரு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். வாய்ப்பு இருந்தால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'டிரிப்பிள் வெசல் டீசிஸ்' என்று ஒரே நேரத்தில் 3 ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்.

இவர்களுக்கு ரத்தக் குழாயில் பல இடங்களில் அடைப்பு, சிதைவு இருப்பதால், ஸ்டென்ட் வைக்க முடியாது; பைபாஸ் செய்வது தான் ஒரே தீர்வு.

உடல் பருமன், பி.சி.ஓ.டி., எனப்படும் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு இன்சுலின் முறையாக வேலை செய்யாததால், அடுத்த 5 ஆண்டுகளில் நீரிழிவு பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

அதேப்போல் கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்பட்ட பெண்களுக்கு குழந்தை பெற்ற 3 ஆண்டுகளில் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது.

நீரிழிவு பாதிப்பு வரும் வாய்ப்பு இருப்பவர்களுக்கும் அடுத்த சில ஆண்டுகளில் ஹார்ட் -அட்டாக் ஏற்படும். பல விதங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், இவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.