தீவிர மது பழக்கத்தால் அதிகரிக்கும் லிவர் சிரோசிஸ்!!
முப்பது வயதிற்குட்பட்டவர்கள், ' லிவர் சிரோசிஸ்' பிரச்னையால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. இது கல்லீரல் சுருக்க நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) என்பது கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான திசுக்கள் வடு திசுக்களால் மாற்றப்படும் ஒரு நிலை ஆகும்.
பள்ளியிலேயே அறிமுகமாகும் மதுப் பழக்கம், கல்லுாரி வரை தொடர்கிறது. அளவிற்கு அதிகமாக மது அருந்தினால், லிவர் சிரோசிஸ் அதிகரித்து, கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்.
மதுவுக்கு அடிமையாவதைத் தவிர, பதப்படுத்திய உணவுகள், உடற்பயிற்சியின்மை, மரபியல் ரீதியிலான கல்லீரல் கோளாறுகளும், அதிக அளவில் இளைஞர்களை பாதிக்கிறது.
இதனால், உடல் உள் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு, உள் உறுப்புகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.
லிவர் சிரோசிஸ் நிலையால் கல்லீரலின் திசுக்கள் கெட்டு, தழும்புகள் ஏற்பட்டால், மீண்டும் பழைய நிலைக்கு வருவது சாத்தியமில்லை.
கல்லீரலைப் பொருத்தவரை, வருமுன் காப்பதே சிறந்த வழி. அப்படி இல்லாவிட்டால், துவக்கத்திலேயே கண்டறிந்து, நிரந்தரக் கோளாறு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை செய்ய வேண்டும்.
இளைஞர்கள் மது பழக்கத்தை கைவிடுதல், உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி, உடல் எடையை சீராக வைத்திருப்பது, ஆகியவை மட்டுமே லிவர் சிரோசிஸ் பிரச்னைக்கு தீர்வு.