எது நல்லது வெண்ணெயா? எண்ணெயா?

நாம் சமையலுக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவையே முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகின் பிற நாடுகளில் எண்ணெயை விட அதிகமாக வெண்ணெயே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சொல்லப்போனால் வெண்ணெய் தான் பல நேரங்களில் உணவின் சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்ற கேள்வி நீண்ட காலமாக உள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை சார்பிலான ஆய்வில், ஆலிவ், சோயா பீன்ஸ் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்தியவர்களுக்கு இதயநோய்க்கான வாய்ப்பு 16 % குறைவாக இருந்தது.

அதேபோல யாரெல்லாம் வெண்ணெயைப் பயன்படுத்திச் சமைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் 12 % அதிகமாக இருப்பது தெரியவந்தது.

எனவே ஒரு நாளில் பயன்படுத்தும் வெண்ணெயை வெறும் 10 கிராம் மட்டும் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக அதே 10 கிராம் அளவு தாவர எண்ணெயை பயன்படுத்தினால் பலவித நோய்களிலிருந்து விடுபடலாம்.

இதனால் நமது ஆயுள் 17 % அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தாவர எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்புகளும், வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளன.

இது ரத்தத்திலுள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்; இதுவே இதய நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. எனவே, தாவர எண்ணெய் வகைகளே சிறந்தவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.