கோடையில் உடல் உஷ்ணத்தை தவிர்க்க இதோ சில டிரிக்ஸ்...!

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையால் தலைவலி, ஒற்றை தலைவலி, மயக்கம், முகப்பரு, உதட்டில் வெடிப்பு ஏற்படும். இவற்றை தவிர்க்க, நீர்ச்சத்து குறையாமல் வைத்திருப்பது அவசியம்.

காலையில் டீ, காபிக்கு பதிலாக இளநீர், நீராகாரம் குடிக்கலாம். அரை டீஸ்பூன் வெந்தயம் அல்லது பாதாம் பிசினை நீரில் ஊற வைத்தும் உட்கொள்ளலாம். காலை உணவாக கம்பங்கூழ், கேப்பங்கூழ் எடுக்கலாம்.

வெயில் உச்சத்திலிருக்கும் காலை 11.00 முதல் மாலை 3.00 மணி வரை டீ, காபியை தவிர்த்து, குளுர்ச்சி தரும் மோர் எடுக்கலாம்.

தர்பூசணி, கிர்ணி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை தினமும் பழத் துண்டாகவோ, ஜுஸாகவோ அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வழக்கமாக குடிக்கும் நீரில் துளசி விதைகளை ஊற வைத்து குடிப்பது, வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடுவது உடலை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும்.

வாரம் இரு முறை தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, அதிகபட்சம் 30 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.

செரிமான பிரச்னையை தவிர்க்க காரமான, மசாலா அதிகளவில் கலந்த உணவை தவிர்க்கவும். வெள்ளை பூசணி, சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகளவில் சேர்க்கலாம்.