2022ல் கவனத்தை ஈர்த்த புதுமுக ஹீரோயின்கள் !
புதுமுகங்களைப் பொறுத்தவரையில் படங்கள் ஓடினாலோ, பாடல்கள் சூப்பர் ஹிட்டானால், மட்டுமோதான் அதிகம் கவனிக்கப்படுவர். இந்த ஆண்டில் அப்படி கவனிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர்தான்.
தெலுங்கில் 'உப்பெனா' படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர் கிரித்தி ஷெட்டி. தமிழ், தெலுங்கில் தயாரான 'த வாரியர்' படம் வெற்றி பெறாவிட்டாலும், 'புல்லட் சாங்' பாடல் மூலம் பிரபலமானார்.
'விருமன்' படத்தில் அறிமுகமான அதிதி ஷங்கர் படத்தை விட, அவர் சொன்ன 'கடி' ஜோக்குகளால் பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்கிறார்.
'கேஜிஎப்' கன்னடப் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி, 'கோப்ரா' படத்தின் மூலம் இங்கு கதாநாயகியாக அறிமுகமானார். முக்கியத்துவம் இல்லாததால், அதிகப் பெயரை வாங்க முடியவில்லை.
'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இட்னானி. ஆக்ஷன் படம் என்றாலும் படத்தில் இடம் பெற்ற காதல் காட்சிகளால் கவனிக்கப்பட்டவர் சித்தி.