இட்லியை உடைத்தால் உள்ளே கறி... ருசியான சண்டே டிஃபன் ரெடி !

கறி இட்லி, கறி தோசை என சிக்கன், மட்டன் கொண்டு சமைக்கப்படும் ரெசிபிகள், அசைவ உணவுப் பிரியர்களிடையே தற்போது அதிக வரவேற்பு பெற்று வருகின்றன.

உணவகங்களில் நூறு ரூபாய்க்கு விற்பனையாகும் இவற்றை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். கறி இட்லி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கியவுடன், சுத்தம் செய்த போன்லெஸ் சிக்கனை சேர்க்கவும். தேவையான அளவு சிக்கன் மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

2 நிமிடங்கள் கழித்து இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும். 15 நிமிடங்கள் கழித்து சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரியும் பதத்தில் தனியே எடுத்து வைக்கவும்.

இட்லி பாத்திரத்தில் உள்ள தட்டில் பாதியளவு மாவை ஊற்றவும். இதன்மீது சிக்கன் கறி கிரேவியை சிறிது வைத்து, அதன்மீது மீண்டும் மாவை ஊற்றி அனைத்து குழிகளையும் நிரப்பி, வேக வைத்து இறக்கவும்.

இப்போது ஆவி பறக்க கறி இட்லி ரெடி. சிக்கன் அல்லது மட்டன் குழம்பு, தேங்காய், புதினா சட்னி சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.