ஹெல்த்தியான பலாக்கொட்டை பொடிமாஸ்... குட்டீஸ்கள் விரும்பிச் சாப்பிடுவர் !

தேவையானப் பொருட்கள் : பலாக்கொட்டை : 1/4 கிலோ, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்துப்பருப்பு, மஞ்சள் தூள் : தலா 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் : 1 சிட்டிகை...

காய்ந்த மிளகாய் : 5, சிறிய வெங்காயம் : ஒரு கைப்பிடி அளவு, கொத்தமல்லி இலை : சிறிதளவு, கறிவேப்பிலை : 2 கொத்து, உப்பு, சமையல் எண்ணெய் : தேவையான அளவு.

வேக வைத்த பலாக்கொட்டைகளை தோலுரித்து காய்கறி துருவலில் துருவி எடுக்கவும். இல்லாவிட்டால், மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பலாக்கொட்டைகள் சூடு ஆறியவுடன் தான் அரைக்கவோ, துருவவோ வேண்டும். அப்போதுதான் நன்றாக உதிரி உதிரியாக கிடைக்கும். இல்லாவிட்டால் குழைந்து விடும்; சுவையும் குறையக்கூடும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, க.பருப்பு, உ.பருப்பு போட்டு தாளிக்கவும்; கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், ம.தூள், பெ.தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

பின், துருவிய பலாக்கொட்டைகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஏற்கனவே, பலாக்கொட்டைகளை வேக வைத்திருப்பதால், ஒரு சில நிமிடங்கள் வதக்கினாலே போதுமானது.

பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால், சுவையான, ஆரோக்கியமான பலாக்கொட்டை பொடிமாஸ் ரெடி. இதில், ஒரு சில பலாக்கொட்டைகளை மட்டும் சிறு சிறு துண்டுகளாகவும் சேர்க்கலாம்.