கண்ணாடி பாட்டிலில் பிளாஸ்டிக்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கண்ணாடிப் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் பாதுகாப்பானவை என்ற பொதுவான நம்பிக்கை தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
பிரான்சில் நடந்த ஓர் ஆய்வில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்பானங்கள், பீர், எலுமிச்சைச் சாறு போன்ற கண்ணாடிப் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களில், லிட்டருக்கு 100 நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது.
இது அசல் பிளாஸ்டிக்காலான பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் இருக்கும் பிளாஸ்டிக் நுண் துகள்களை விட கணிசமாக அதிகம்.
பாட்டில்களில் இருக்கும் உலோக மூடிகளின் மேல் பூசப்பட்டுள்ள அலங்காரப் பெயின்ட் கரைந்து கலப்பதே இந்த மாசுக்கு முக்கியமான காரணம்.
பாட்டில் மேல்மூடியை அடைக்கும் முன், மூடிகளை காற்றால் ஊதி கழுவுவதன் வாயிலாக, துகள்களின் எண்ணிக்கையை 60% வரை குறைக்கலாம்.
கார்க் எனும் தக்கையால் மூடப்பட்ட கண்ணாடி பாட்டில்களிலுள்ள தண்ணீர் மற்றும் ஒயின்களில் மிகக்குறைந்த அளவே நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தயாரிப்பாளர்கள் மூடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வின் முடிவுகள், வலியுறுத்துகின்றன.