சமோசா, ஜிலேபி உடல் நலத்திற்கு கேடு : எச்சரிக்கை வாசகம் வைக்கிறது மத்திய அரசு
சிகரெட் பாக்கெட்டுகளில், 'புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு' எனவும், மது பாட்டில்களில், 'மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு' என எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுகின்றன.
அதேபோல் சமோசா, ஜிலேபி போன்ற நொறுக்குத்தீனிகளை விற்கும் கடைகளில் இனி எச்சரிக்கை வாசகங்களை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காரணம் இனிப்புகளும் நொறுக்குத்தீனிகளும் நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
'2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 44 கோடி பேர் நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற வாழ்வியல் மாற்ற நோய்களுக்கு உள்ளாகக்கூடும்' என, 'லான்செட்' மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில் தகவல் வந்தது.
இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை, அதிக இனிப்பு, கொழுப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
அதனால் சமோசா, ஜிலேபியில் உள்ள சர்க்கரை, கொழுப்புச்சத்துகளின் அளவு, உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை கடைகளின் வாசலில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில், சோதனை ஓட்டமாக இந்த எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட உள்ளது.
இதேபோல் மற்ற உணவகங்கள் முன் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 'இது வெறும் எச்சரிக்கை தான். இந்த உணவுகளுக்கு தடை விதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதிக கொழுப்பு, சர்க்கரை உள்ள உணவுகள் நிறைய சாப்பிடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை துவக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.