கர்ப்பிணிகளுக்கு போலிக் அமிலத்தால் உண்டாகும் நன்மைகள்...!
கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமில மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
அதென்ன போலிக் அமிலம்? எதற்காக இதற்கு இவ்வளவு முக்கியத்துவம், இதனால் உடலுக்கு என்ன பயன் என்பது பற்றிய விவரங்களைப் பார்ப்போமா?
போலிக் அமிலம் உடலுக்கு வைட்டமின் பி9-ஐ அளிக்கிறது. தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமினான இது உடலுக்குத் தேவையான புரதச் சத்தை அதிகரித்து டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலுக்குத் தேவையான சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போலிக் அமிலம் உதவும்.
கர்ப்ப காலத்தில் போலிக் அமிலம் நிறைந்த பழங்கள், உணவுகளை சாப்பிட மகப்பேறு மருத்துவர்கள் வலியுறுத்துவர்.
நிலக்கடலை, முழு தானியங்கள், முட்டை, மாமிசம், பேரிச்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களில் போலிக் அமிலம் இயற்கையாகவே இருந்தாலும், குறைந்த காலத்தில் அதிக போலிக் அமிலம் பெற மாத்திரைகள் உதவுகின்றன.
போலிக் அமிலம் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் பிரச்னைதான். எனவே கர்ப்ப காலத்தில் இதனை கட்டுக்குள் வைத்திருக்க மாத்திரைகள் குறிப்பிட்ட அளவிலேயே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மதுப்பழக்கம் போலிக் ஆசிட் உருவாக்கத்தை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.