குதிகால் வலிக்கு காரணமும்.. தீர்வும் இதோ !
குதிகால் வலி பொதுவாக 30 - 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகம் உண்டாகிறது. குறிப்பாக, பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குதிகால் எலும்பிலிருந்து 'பிளான்டார் அப்போநீரோசிஸ்' எனும் திசுக்கொத்து கால் கட்டை விரல் வரை செல்லும். இந்த பகுதியில் எதாவது அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டானால் வலி வரும்.
சிலருக்குக் குதிகால் பகுதியில் சிறிதளவு எலும்பு வளரக்கூடும் இதை 'கால்கேனியல்ஸ்பர்' (Calcaneal Spur) என அழைப்பர். இதுவும் வலிக்கு காரணமாகும்.
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானாலோ, முடக்குவாதம், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம்.
மேலும் சுளுக்கு, எலும்பு முறிவு, எதிர்வினை மூட்டுவலி போல வேறு சில காரணங்களாலும் குதிகால் வலி வரும். உடல் எடை அதிகரிப்பதும் முக்கிய காரணம்.
தினமும் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலருக்கும் வரும். பெற்றோருக்கு இந்த பிரச்னையிருந்தாலும் பிள்ளைகளுக்கு வரக்கூடும்.
ஹை ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பு அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தாங்க முடியாத வலி, குதிகால் சிவத்தல், வீக்கம், நிக்க முடியாத நிலை இதன் அறிகுறிகள்.
எந்த வலிக்கும் முதல் தீர்வு ஓய்வு தான். ஓய்வின்றி நின்று கொண்டே இருப்பதால் தான் குதிகால் வலி அதிகமாகும். பாதத்தை முன்னும் பின்னுமாக 'ஸ்ட்ரெச்சிங்' பயிற்சி செய்ய வேண்டும்.
மிதமான சுடுதண்ணீரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 10 நிமிடம் வரை கால்களை வைத்திருந்தால் தீர்வு கிடைக்கும். வலி இருக்கும் போது தினமும் 2 முறை செய்யலாம்.
குதிகால் வலி இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடித்தால் உடனே மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.