சிறந்த ஆடை அணிந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த ராம்சரண்
உலகளவில் முக்கிய விருதுகளில் ஒன்று கோல்டன் குளோப் விருது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 80ம் ஆண்டு விருது கடந்த 11 ல் நடந்தது. அது இந்தியாவில் தலைப்புச் செய்தியாக மாறியது.
காரணம்... ஆர்.ஆர்.ஆர்., படத்தில் இடம்பெற்ற கீரவாணி இசையமைத்த அதிரடி பாடலான நாட்டுக் கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் இசைக்கான கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்றது.
இந்நிகழ்வில் இன்னொரு விஷயமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது ராம்சரணின் பந்த்காலா உடை. கோல்டன் குளோப் ரெட் கார்பெட்கள் கவுன்கள், கோட் சூட்களால் நிரம்பியிருந்தது.
பிரபல இந்திய பேஷன் கலைஞர் தருண் தஹிலியானியின் கைவண்ணத்தில் உருவான இந்திய பாரம்பரிய உடையான பந்த்காலாவை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார் ராம்சரண்.
அப்போது அவரின் மனைவி உபாசனாவும் தென்னிந்தியப் பாரம்பரிய உடையான புடவையிலேயே பங்கேற்றார். இது போன்ற உலகளாவிய நிகழ்ச்சிகளில் பிரபலங்களின் சிறந்த உடைகளை எஸ்கொயர் இதழ் பட்டியலிடும்.
இது மிகப்பெரிய ஸ்டைல் தொடர்பான பத்திரிகை. இந்த இதழ் விருது விழாவில் சிறந்த ஆடை அணிந்தவர்களின் பட்டியலில் ராம்சரணையும் தேர்வு செய்தது.
பிட்டான சாலிட் கருப்பு வண்ண, எளிமையான பந்த்காலா இந்திய பேஷனை உலக அரங்கிற்கு அழைத்துச் சென்றது. ராம்சரண் தனது உடையால் ஹாலிவுட் பத்திரிகைகளை வியப்பில் ஆழ்த்தினார் என்றேக் கூற வேண்டும்.