பெருவெள்ளத்தில் நம் வாகனங்களை காக்கும் சிறுதுளி பிரீமியம்!

பருவ மழைக்காலங்களில் வாகன காப்பீடு கிளெய்ம் கேட்டு வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரியாக 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2023 ஜூன் முதல் செப்டம்பர் வரை, வாகன காப்பீடு கிளெய்ம் சராசரி தொகை 30,000 ரூபாயாக இருந்தது. இது, தற்போதைய பருவ மழைக்காலத்தில் 40,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வாகன காப்பீட்டில், வாகனம் முழுமைக்கும் காப்பீடு, பகுதியளவு காப்பீடு என இரண்டு வகை திட்டங்களை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன.

வாகன இன்ஜினுக்கு காப்பீடு செய்ய பிரீமியம் கூடுதலாக கட்ட வேண்டும் என்பதால், பலரும் இன்ஜினை காப்பீடு செய்வதில்லை.

ஆனால், மழை, வெள்ளத்தில் சிக்கும் வாகனங்களில் இன்ஜின் பழுதாக அதிக வாய்ப்புள்ள நிலையில், அதற்கான கிளெய்ம் கிடைப்பதில்லை.

பெருநகரங்கள் முதல் 2ஆம், 3ஆம் நிலை நகரங்களில் கூட, குறுகிய நேரத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதால், வெள்ளத்தில் மூழ்கும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெள்ளத்தில் வாகனம் மூழ்கினால், பழுதாகும் இன்ஜினை சரிசெய்ய கூடுதல் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மழை தொடர்பான வாகன பழுதுகள் அதிகம் என்ற நிலையில், 20 சதவீத வாடிக்கையாளர்களே இன்ஜினுக்கும் சேர்த்து காப்பீடு செய்கின்றனர்.

வழக்கமான வாகன காப்பீட்டில், வெள்ளத்தில் சிக்கும் வாகனத்தின் இன்ஜின் செயலிழப்புக்கு, கிளெய்ம் பொருந்துவது இல்லை.

ரைடர் அல்லது ஆட் - ஆன் எனப்படும், ஒரு காப்பீடு பாலிசியில் கூடுதல் சேவையாக தேர்வு செய்து, அதற்கான கூடுதல் பிரீமியம் செலுத்தினால் மட்டுமே இதை பெற முடியும்.

எனவே, வாகன காப்பீட்டில் சில நுாறு ரூபாய் பிரீமியத்தை செலுத்த முன்வந்தால், மழைக்கால பாதிப்பின்போது பல ஆயிரம் ரூபாயை கிளெய்ம் பெற்று செலவை மிச்சப்படுத்தலாம்.