உங்கள் செல்ல நாய்க்கு சைவம் நல்லதா?

சுற்றுச்சூழல், உயிரினங்கள் மீது கொண்ட அக்கறையால் உலகம் முழுதும் உள்ள மக்களில் பலர் சைவ உணவு முறையைப் (veganism) பின்பற்றத் துவங்கியுள்ளனர்.

இதனால் இறைச்சி உணவை விரும்பும் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு என்ன உணவு கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்குத் தீர்வாக நாய்களுக்கான சைவ உணவுகள் சந்தைக்கு வரத் துவங்கியுள்ள நிலையில், அசைவத்திலுள்ள சத்து இதில் இருக்காது என்பது பொதுக்கருத்தாக உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் பல்கலை ஆய்வாளர்கள் ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், இறைச்சி அடிப்படையிலான மற்றும் புதிதாக வந்துள்ள தாவர அடிப்படையிலான நாய் உணவுகளுக்கு இடையிலான ஊட்டச்சத்து வேறுபாட்டை ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில், தாவர அடிப்படையிலான உணவுகள், இறைச்சி உணவுகளுக்குச் சமமான ஊட்டச்சத்தைத் தருவது தெரிய வந்தது.

அதாவது இரண்டிலும் புரதம், அமினோ அமிலம், கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் ஒரே அளவில் இருந்தன.

இருப்பினும், தாவர உணவுகளில் அயோடின், வைட்டமின் பி சற்றுக் குறைவாக இருந்தன. இவற்றை கூடுதல் 'சப்ளிமென்ட்டுகள்' மூலம் சரி செய்ய முடியும்.

தரமான தாவர அடிப்படையிலான நாய் உணவுகளில், மாமிச உணவுகளிலுள்ள அதே சத்துகள் இருக்கும். எனவே, நாய்களுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.