ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல்
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது
சந்திரபோஸ் எழுதி, ராகுல் சிப்லிகுன்ச், கால பைரவா பாடிய இந்தப் பாடல் வெளிவந்த சமயத்திலிருந்தே, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது.
இப்பாடலுக்காக பிரேம் ரக்ஷித் நடன இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் ஆடிய அதிரடி நடனமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம் இப்போது, பெருமைக்குரிய ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம் மேலும் ஒரு பெருமை மிகு சாதனையைப் படைத்துள்ளது.
இன்று நடைபெற்ற விழாவில் அந்தப் பாடலை ஆஸ்கர் மேடையில் ராகுல் சிப்லிகுன்ச், கால பைரவா இருவரும் பாடினர். அவர்கள் பாடி முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.
அவர்கள் பாடுவதற்கு முன்பு அதற்கான அறிவிப்பை இந்திய நடிகையான தீபிகா படுகோனே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் கீரவாணி, பாடல் எழுதிய சந்திரபோஸ் இருவரும் மேடையேறி ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.
இந்தியத் தயாரிப்பான ஆர்ஆர்ஆர் படம் பெற்றுள்ள இந்த ஆஸ்கர் விருது, இந்தியத் திரையுலகத்துக்குப் பெருமையைச் சேர்த்துள்ளது.
ஏற்கனவே இந்த 'நாட்டு நாட்டு' பாடல் குளோபல் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.