கோடைக்கு இதமாக குளு குளு.. குலு மணாலிக்கு ஒரு விசிட்...!

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலு - மணாலி... பனி மூடிய பசுமை மலைகளையும், குளிர்ச்சியான காற்றையும் விரும்புகிறவர்களுக்கு சுற்றுலா செல்ல சிறந்த தேர்வாகும்.

வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமூடிய மலைச்சிகரங்கள், ஆப்பிள் தோட்டங்கள் என தன் இயற்கை அழகால் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக வசீகரிக்கிறது மணாலி.

புதுமணத் தம்பதிகளுக்கு மிகவும் விருப்பமான ஹனிமூன் ஸ்பாட்டாகவும் இது உள்ளது.

சாகச பிரியர்களுக்கு பராகிளைடிங், டிரெக்கிங், கேம்பிங், ஆங்கிலிங், ரிவர் ராப்டிங், ஸ்கீயிங் உட்பட பல்வேறு விளையாட்டுகள் இங்கு உள்ளன.

குலு, மணாலியில் ஆண்டு முழுவதுமே இதமான பருவநிலை நிலவுகிறது. மார்ச் - ஜூனில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்க சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

நவம்பர்- ஜனவரி பனிப்பொழிவு காலக்கட்டத்தில் பனிப்பொழிவை ரசிக்கவும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

குலு மணாலியை முழுமையாக சுற்றிப்பார்க்க குறைந்தபட்சமாக 4 முதல் 5 நாட்கள் தேவைப்படுகிறது.

சோலாங் பள்ளத்தாக்கு, ரோஹ்தாங் பாஸ், ஹடிம்பா கோவில், திபெத்திய மடாலயங்கள் மற்றும் பியாஸ் நதி உட்பட பல்வேறு இடங்கள் இங்கு பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளன.