பாகுபலி 2 - ஹாலிவுட் படங்களிலிருந்து காப்பியடித்த ராஜமவுலி?

இந்தியத் திரையுலகத்தில் பெரும் வசூல் சாதனையைப் புரிந்த படம் 'பாகுபலி 2'. இன்றைய பல பான் இந்தியா படங்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கிறது என பலரும் சொல்லி வருகிறார்கள்.

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா , அனுஷ்கா, சத்யராஜ் என பலர் நடித்து 2017ல் வெளிவந்த படம்.

தமிழில் முன்பு வந்த சரித்திரப் படங்களின் கதைகளை மையமாக வைத்து கதையை உருவாக்கி கிராபிக்ஸ் சேர்ந்து ராஜமவுலி அப்படத்தைக் கொடுத்தார் என அப்போதே ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

தற்போது 29 ஹாலிவுட் படங்களில் இடம் பெற்ற காட்சிகளை 'சுட்டு' 'பாகுபலி 2' படத்தில் ராஜமவுலி பயன்படுத்தி இருக்கிறார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அதில் அந்த 29 வெவ்வேறு விதமான படங்களின் காட்சிகளும், அதை எப்படி 'பாகுபலி 2' படத்தில் பயன்படுத்தி உள்ளார் என்பதையும் எடிட் செய்து பதிவிட்டுள்ளார்கள்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வன்' படம் இந்த மாதக் கடைசியில் வெளிவர உள்ளது.

இப்படத்தை 'பாகுபலி 2' படத்தின் தாக்கத்தினால் தான் மணிரத்னம் எடுத்துள்ளார் என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது.

அதே சமயம் 'பாகுபலி 2' படத்தில் 'பொன்னியின் செல்வன்' நாவலின் பல காட்சிகளை எடுத்து ராஜமவுலி கையாண்டுள்ளார் என்ற விமர்சனமும் உள்ளது.