நெட்டி முறித்தால் மூட்டுத் தேய்மானம் உண்டாகுமா?

நமது உடலில் உள்ள இரண்டு எலும்புகளை ஜவ்வு எனப்படும் கார்டிலேஜ் டிஸ்க் இணைக்கிறது.

விரல்கள், கை, கால், தண்டுவடம், கழுத்து எலும்பு போன்ற பலப்பகுதிகளில் இந்த ஜவ்வு இரு எலும்பு எல்லைகளை இழுத்துப் பிடிக்கும். இது வழவழப்புத் தன்மையுடன் காணப்படும்.

நாம் நமது உடலை பயன்படுத்தி பல்வேறு அன்றாடப் பணிகள் செய்யும்போது எலும்புகள் அசையும். அப்போது எலும்புகள் ஒன்று சேரும் பகுதியில் உராய்வு ஏற்படாமல் தடுக்க இது உதவுகிறது.

இதில் அவ்வப்போது காற்றுப் புகுந்து, சோப்புத் தண்ணீரில் உண்டாவதுபோல நீர்க்குமிழிகளை உண்டாக்கும். எனவே, சோம்பல் முறிப்பது, நெட்டி முறிப்பது போன்ற செயல்களில் தன்னிச்சையாக ஈடுபடுகிறோம்.

நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்து பணியாற்றுபவர்கள், நெட்டி முறிக்கும்போது ஏற்படும் 'படக்' என்கிற சத்தம் மூலமாக ஓர் புத்துணர்ச்சியை உணர்வைப் பெறுவர்.

நெட்டி முறிக்கும்போது கார்டிலேஜ் ஜவ்வு இழுக்கப்படும். அப்போது அங்கு சேர்ந்துள்ள நீர்க்குமிழிகள் பலூன் வெடிப்பது போன்று வெடிப்பதால், நெட்டி முறிக்கும்போது சப்தம் ஏற்படுகிறது.

நெட்டி முறிப்பது பெரும்பாலும் ஆர்தரைட்டிஸ் உள்ளிட்ட தீவிர மூட்டு பாதிப்புகளை உண்டாக்காது என சொல்கின்றனர் டாக்டர்கள்.

ஆனால் அடிக்கடி இதை செய்யாமல் இருந்தால் கார்டிலேஜ் ஜவ்வு ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.