லே-லடாக் சாகச பயணத்துக்கு இதோ சில டிராவல் டிப்ஸ் !

கம்பீரமான இமயமலைக்கு மத்தியில், லே-லடாக் பயணம் என்பது இளசுகளின் தீராக்கனவு.

அதன் கரடுமுரடான நிலப்பரப்புகள், மூச்சடைக்கக்கூடிய காட்சிகள் மற்றும் அமைதியான மடாலயங்கள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

வசதி மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால் லேவுக்கு விமானம் மூலமாக இங்கு செல்லலாம்.

லேயில் உள்ள குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலைத்துக்கு டில்லி, மும்பை மற்றும் ஸ்ரீநகர் போன்ற முக்கிய இந்திய நகரங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது.

அதேவேளையில் சாகச பயணத்தை விரும்புபவர்கள் லே-லடாக்கிற்கு சாலைப் பயணத்தைத் தேர்ந்தெடுப்பர்.

மணாலி-லே நெடுஞ்சாலை... மணாலியில் துவங்கி ரோஹ்தாங் பாஸ் மற்றும் பரலாச்சா லா போன்ற உயரமான மலைப்பாதைகளைக் கடந்து, பனி மூடிய சிகரங்கள், அழகிய பள்ளத்தாக்குகளின் வழியே பயணிக்கலாம்.

ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை... இந்த பயணம் ஜோஜி லா பாஸ், பூமியில் வசிக்கும் இரண்டாவது குளிர்ந்த இடமான டிராஸ் வழியாக செல்கிறது. சோனாமார்க், கார்கில் போன்ற இடங்களை ரசிக்கலாம்.

சண்டிகர்-லே நெடுஞ்சாலை... சண்டிகரில் துவங்கி, லடாக்கின் கரடுமுரடான நிலப்பரப்பில் நுழைவதற்கு முன், நெடுஞ்சாலை ஹிமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பள்ளத்தாக்குகள் வழியாக அமைதியாக பயணிக்கலாம்.

பஸ் பயணம்... கோடையில் மணாலி, ஸ்ரீநகர் மற்றும் டெல்லி போன்ற நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் லேவிற்கு சேவைகளை வழங்குகின்றன.

மோட்டார் சைக்கிள்... சாகசப்பிரியர்களுக்கு லே-லடாக்கிற்கு டூவீலரில் பயணம் என்பது மெய்சிலிர்க்க வைக்கும். மணாலி அல்லது ஸ்ரீநகரில் டூவீலர்கள் வாடகைக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.