கோடை காலத்தில் தாக்கும் 4 முக்கிய பாதிப்புகள்…

கோடைகாலம் துவங்கி விட்டது. வெயில் சீற்றம் மிரட்டுகிறது. வெப்பம், வியர்வை, அரிப்பு, சோர்வு போன்ற தொல்லைகளால் உடலில் உபாதைகள் ஏற்படும். அவற்றில் சிலவற்றை குறித்து பார்க்கலாம்.

வியர்க்குரு : உடலின் இயல்பு வெப்பநிலை, 37 டிகிரி செல்சியஸ். கோடையில், 40 டிகிரிக்கு அதிகமாகும். அப்போது, உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை வெளியேறும்.

இந்த நேரத்தில் உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அலட்சியம் காட்டினால், தோல் வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து வியர்குரு தோன்றும்.

வேனல்கட்டி : உடலில் தோல் வழியாக உப்பு வெளியேறும், முறையாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கி, வீங்கி கட்டியாகும். வியர்க்குருவை தடுத்தாலே வேனல் கட்டி மறையும்.

நீர்க்கடுப்பு : வெப்பம் அதிகரிப்பால் கோடையில் அனைவரும் சந்திக்கும் பிரச்னை நீர்க்கடுப்பு. உடல் வெப்ப நிலையை சீராக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும்.

இதை ஈடுகட்ட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி செய்யா விட்டால் சிறுநீர் அளவு குறையும். சிறுநீரில் வெளியேற வேண்டிய உப்புகள் படிந்து நீர்க்கடுப்பை ஏற்படுத்தும்.

வெப்ப தளர்ச்சி : வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது உடலில் வெப்பம் அதிகரித்து தளர்ச்சி ஏற்படும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தில் இவை ஏற்படும்.

சுரைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், புடலை, அவரை, முட்டைகோஸ், மோர், காய்கறி சூப், பழச்சாறு, பதநீர் மற்றும் நுங்கு போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.