வெண்புள்ளி என்பது பரம்பரை நோயா?
லூக்கோடெர்மா அல்லது விடிலிகோ என்று மருத்துவ உலகில் கூறப்படும் வெண்புள்ளி பிரச்னை, கிருமிகளால் ஏற்படும் நோயோ, தொற்றுநோயோ அல்ல.
இது தோல்களில் ஏற்படும் ஒருவகை குறைபாடு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினருக்கும் வரலாம்.
தோல்களுக்கு நிறத்தைக் கொடுக்ககூடியது 'மெலானின்' (Melanin) என்னும் நிறமியின் சுரப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்து போவதால் அந்தப் பகுதியில் வெண்புள்ளிகள் ஏற்படுகின்றன.
மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள், தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாடு, ரத்தச்சோகையின் தீவிர நிலை போன்ற நோய்களால் வரலாம்.
குடும்பத்தில் ஒருவருக்கு வெண்புள்ளி பாதிப்பு இருந்தால் மரபணு காரணமாக பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் அனைவருக்கும் வரும் என்றில்லை.
ஆரம்ப நிலையிலே மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்தவோ குணப்படுத்தவோ முடியும். பாதிப்பு ஏற்பட்ட உடன் மருத்துவரை அனுகுவது நல்லது.
பாதிப்பிற்கேற்ப சிகிச்சை முறை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஸ்டீராய்டு போன்ற மருந்து மாத்திரைகளே சிலருக்குப் போதுமானதாக இருக்கும்.
வெண்புள்ளி ஒரு தொற்றுநோயல்ல. பாதிப்புள்ள ஒருவரைத் தொடுவது, அவருடன் பழகுவது போன்ற செயல்பாடுகளால் மற்றவருக்குப் பரவாது.