மருத்துவ குணம் கொண்டது உளுந்து வெந்தயக்களி... ரெசிபி இதோ!

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை உள்ளன. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

உளுந்து சாப்பிடுவதால் எலும்புகளின் தாது அடர்த்தி அதிகரிக்கும். இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டு வலி போன்ற எலும்பு பிரச்னைகளை தடுக்கலாம்.

வாரம் ஒரு முறை உளுந்து வெந்தயக் களி செய்து சாப்பிடுவது பல நன்மைகளை தரும். எப்படி செய்வது என்பது குறித்து அறிந்துக்கொள்வோமா…

இதெல்லாம் தேவை : 1 கப் புழுங்கல் அரிசி, 1/4 கப் வெந்தயம், 1/4 கப் உளுந்து, 2 கப் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, 5 ஏலக்காய்

செய்முறை : முதலில் புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுந்து ஆகிய மூன்றையும் குறைந்தது 5 மணி நேரம் ஒன்றாக ஊறவைத்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பின்பு அரைத்த மாவை அதில் ஊற்றி, தொடர்ந்து குறைவான தீயில் கிளறி விடவும். மாவை கிளறக் கிளற சற்று கெட்டியாக மாறும். அந்த சமயத்தில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும்.

களி பதத்திற்கு வந்ததும், 2 கப் அளவிற்கு நாட்டுச் சர்க்கரை, அல்லது கரைத்த வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின் அதில் 3 முதல் 5 ஏலக்காய் இடித்துச் சேர்த்து கிளறவும்.

களியை இறக்கும் முன் 4 அல்லது 5 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான வெந்தயக்களி தயார். சுவைக்கு நெய் வேண்டும் என்றாலும் சேர்க்கலாம்.