கழுத்தில் காணப்படும் கருமைக்கு நீரிழிவு காரணமா?

நிறைய பேருக்கு அக்குள் பகுதி, கழுத்து பின் பகுதியில் தோல் மிகவும் கருமையாக இருக்கும். மேலும் முழங்கை மூட்டுகள், கால் மூட்டுகள், போன்ற இடங்களிலும் இந்த பாதிப்பு வரலாம்.

இதற்கு அந்த பகுதிகளில் சருமம் தடிமன் ஆவதுதான் முக்கிய காரணம். இது 'அகன்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' (Acanthosis nigricans) என்று அழைக்கப்படுகிறது.

ரத்தத்தில் இன்சுலின் அதிகமாக இருப்பதாலும் இது ஏற்படலாம். அதனால் தான் நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையாக இது கருதப்படுகிறது.

ஹைப்போ தைராய்டிசம், பிசிஓஎஸ் போன்ற ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் உண்டாகலாம்.

இந்த பிரச்னை உள்ளவர்கள் டால்கம் பவுடர் போடக் கூடாது. பவுடர் போட்டு வெயிலில் நடப்பது, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, மற்ற பகுதியிலும் கரும்படலம் ஏற்பட்டு விடும்.

லாக்டிக் ஆஸிட் அடிப்படையிலான கிரீம்கள் அல்லது லோஷன்களைப் பயன்படுத்தலாம். நல்ல பலன் தரும்.

இப்பிரச்னை உள்ளவர்கள் அதிக மாவுச்சத்தும், இனிப்பும் உள்ள உணவுகளை தவிர்த்து , நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

மேலும் ரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்த்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான எடை பராமரிப்பும் அவசியமாகிறது.