பலா விதைகளைச் சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கியப் பலன்களா?
உலகின் மிகப் பெரிய பழ வகையான பச்சை நிற பலாப்பழத்தின் சுவையை விரும்பாதவர் யார்? பலாச்சுளையை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான்..!
பொட்டாசியம், வைட்டமின் பி, புரதம் உள்ளிட்ட பல சத்துகள் இதில் அடங்கியுள்ளன. ஆனால் பலாச்சுளையின் உள் இருக்கும் பலா விதைகளின் ஆரோக்கியப் பலன்கள் நம்மில் பலருக்குத் தெரியாது
பலா விதைகளின் பலன்களைத் தெரிந்துகொண்டால் அடுத்தமுறை பலாப்பழம் சாப்பிடும்போது விதைகளைத் தூக்கி எறிய மாட்டீர்கள்.
பலா விதைகளை சாம்பாரில் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவர். பலா விதைகள் வயோதிகம் காரணமாக முகத்தில் உண்டாகும் சுருக்கங்களைக் குறைக்கும். சருமப் பொலிவுக்கு உதவும்.
பலா விதைகளை சாப்பிடும் அதே சமயத்தில் இதனை அரைத்து தேன் மற்றும் பாலுடன் கலந்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
பலா விதைகளில் உள்ள மைக்ரோ நியூட்ரியன்டுகள், புரதச் சத்துகள் சரும நோய்களைத் தடுப்பதுடன், மன அழுத்தத்தைக் குறைவும், கூந்தலின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.
ரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும். இரும்புச் சத்து அதிகம் உள்ள பலா விதைகள் சாப்பிடுவதால் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளைத் தடுக்க உதவும்.
பலாவிதைகளில் வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளதால் கண் பார்வையைத் தெளிவாக்க உதவும். இதனால் மாலைக்கண் நோய் தவிர்க்கப்படுகிறது.
பலா விதைகளை பொடி செய்து, அஜீரணம் ஏற்படும்போது இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறுகள் தவிர்க்கப்படுகிறது.