உடல் என்னும் இயந்திரத்தை ரிப்பேர் செய்யும் தூக்கம்..!

குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பலருக்கும் தினமும் 7 மணி நேரம் தூங்குவது இன்று சிரமமான ஒன்றாகும். ஆரோக்கியத்துக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் எனப் பார்ப்போமா?

தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களை குறைந்த நேரம் தூங்கி, அதிக நேரம் படிக்க ஆசிரியர்கள் வலியுறுத்துவர். இது தவறு. நல்ல தூக்கம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

முறையான தூக்கத்தால் படித்த பாடங்கள் மனதில் நன்கு பதியும். தேர்வை சிறப்பாக எழுதலாம். எனவே தேர்வு நேரத்தில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம்.

சதுரங்க விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் முன் நன்கு தூங்குவர். அப்போது போட்டியில் காய் நகர்த்தலில் சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும்.

தூக்கமின்மை குறைபாடு கொண்டவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி நல்ல மனநிலையில் உங்களை வைத்திருப்பது தூக்கம்.

ஏதாவது ஒரு ஒரு விஷயத்தில் முடிவு குறித்து குழப்பமாக இருந்தால், இரவு தூங்கி காலை எழுந்ததும், உங்கள் எண்ணத்தில் நல்ல முடிவு தானாக முன்வரிசையில் வந்து நிற்கும்.

தூங்கும்போது ரத்த அழுத்தம் குறையும். இதனால் ரத்த நாளங்களுக்கு ஓய்வு கிடைக்கும். மேலும், உடல் வலி, வீக்கம், உடலின் உஷ்ணம் குறையும்.

இரவு பணிசெய்யும் பலருக்கு செரிமானப் பிரச்னை உண்டாகும்; உடற்பருமன் அதிகரிக்கும். நல்ல இரவுத் தூக்கம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் உடல் எடையை சீராக்க உதவும்.

அதே சமயம் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதும் தவறு. இதனால் உடலில் அளவுக்கதிகமான கால்சியம் சேரும். கைக்குழந்தைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.