புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு... ஆய்வில் தகவல்

நம் உடல்நலனுக்கு நல்ல கொழுப்புகள் தேவை. அதிலும், ஒமேகா 3, ஒமேகா 6 ஆகிய கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியமானவை.

ஒமேகா 3, சில தாவரங்கள், மீன்கள், பாசிகளில் உள்ளது. ஒமேகா 6 தாவர எண்ணெய், விதைகளில் உள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, பெரியவர்களுக்கு ஏற்படும் இதய நோய்கள் ஆகியவற்றை இவை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலையின் புதிய ஆய்வில், மேற்கண்ட அமிலங்கள் சில வகை புற்றுநோய்களைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தலை, கழுத்து, உணவுக்குழாய், நுரையீரல், கருப்பை, சிறுநீரகம், மூளை உட்பட 19 இடங்களில் ஏற்படும் புற்றுநோய்களை ஒமேகா கொழுப்பு அமிலங்கள் கட்டுப்படுத்தும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

லண்டனில் நடந்த ஆய்வில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சோதித்துப் பார்த்ததில், அவர்களின் உடலில் ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் மிகக் குறைவாக இருப்பது தெரியவந்தது.

இவை அதிகமாக இருந்தவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படவில்லை.

எனவே, புற்றுநோய் வராமல் தடுக்கவும், பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கும் ஒமேகா 6 கொழுப்பைத் தினமும் ஆண்கள் 17 கிராமும், பெண்கள் 12 கிராமும் எடுக்குமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.