பச்சிளம் குழந்தைகளுக்கு டம்மி டைம் அவசியமா?

பிறந்து, மூன்று - ஐந்து மாதங்கள் வரை, பச்சிளம் குழந்தைகள், மல்லாந்து படுத்த நிலையிலேயே இருப்பர். பிறகு, இடது அல்லது வலது புறமாக, தாங்களே திரும்பிப் படுக்க முயன்று, குப்புறப் படுக்க ஆரம்பிப்பர்.

குப்புறப் படுக்க, குழந்தைகள், சுய முயற்சிகளை ஆரம்பிக்கும் முன்னரே, பெற்றோர் அதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தினமும் குறிப்பிட்ட நேரம், அதற்கான பயிற்சியில், குழந்தையை ஈடுபடுத்த வேண்டும். அந்த நேரம், 'டம்மி டைம்' என அழைக்கப்படுகிறது. ஒரு மாதம் ஆன பிறகு இதை கொடுக்கலாம்.

முதலில் குழந்தைகளை இடது அல்லது வலது பக்கம் ஒருக்களித்த நிலையில் படுக்க வைக்க வேண்டும். பின் சில நாட்கள் கழித்து குழந்தைகளின் வயிறு தரை பகுதியில் படும்படி குப்புற படுக்க வைக்க வேண்டும்.

இப்பயிற்சியால், குழந்தையின் நரம்பியல் வளர்ச்சி, நன்றாக இருக்கும். குழந்தையின் கழுத்து, தோள், கை மற்றும் கால் பகுதிகளிலுள்ள தசைகள் பலமாகும்; உடல் இயக்கங்கள், சீராக நடைபெறும்.

பிறந்த ஆறு மாதங்களுக்குள், குழந்தை, தானாகவே குப்புறப் படுக்க ஆரம்பிக்க வேண்டும். அதற்கு சுயமுயற்சி எடுக்காத குழந்தைகளுக்கு, இந்த பயிற்சிகள் உதவும்.

பால் குடித்தவுடன், குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்தால், வாந்தி எடுக்க நேரிடும்; எனவே, சிறிது நேரம் கழித்து செய்யலாம்.

ஒரு மாத குழந்தையை, ஒரு நாளைக்கு, இரண்டு நிமிடங்களுக்கு குப்புறப் படுக்க வைக்கலாம்.

படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம். 5 -6 மாத குழந்தையை, ஒரு முறைக்கு, 20 நிமிடங்கள் என, ஒரு நாளைக்கு, எட்டு - 10 முறை வரை குப்புறப் படுக்க வைக்கலாம்.