அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை... அறிகுறிகள் இதோ !
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இதை எம்பாக்ஸ் என அழைக்கின்றனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்கு இது பரவுகிறது.
பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவைப் போல 2022 முதல் பரவத் தொடங்கிய இந்நோயானது முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் துவங்கியுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 517 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 160% தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பின் உடலில் தடிப்புகள் ஏற்படும். இது, முகத்தில் இருந்து உள்ளங்கால் வரை பரவும்.
தோல் அரிப்பு, 2 முதல் 4 வாரம் காய்ச்சல், தலைவலி, தசை வலி, உடல் சோர்வு உண்டாகும். தொண்டை வலி மற்றும் இருமல் இருக்கும்.
குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2022ல் கேரளாவில் மூவருக்கு குரங்கு அம்மை உறுதியானது குறிப்பிடத்தக்கது.