நன்மைகளை வாரி வழங்கும் நன்னாரி!

நன்னாரி, கொடியாக தரையில் படரும் தாவரம். கிருஷ்ணவல்லி, அங்கார மூலி, அனாதமூலா, நறுக்கி மூலம், பாதாள மூலி, நறுநீண்டி, சுகந்த மூலி, காணாறுசாரி என, வேறு பெயர்களும் இதற்கு உள்ளன.

இதன் வேர் தான் மருத்துவ குணம் கொண்டது. நறுமணமிக்கது, இனிப்பும், சற்று கசப்பும் கலந்த சுவையுள்ளது. இந்தச் செடியின் வேரை உலர்த்தி பதப்படுத்தி தயாராவது தான், நன்னாரி சர்பத்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வை தருகிறது. அதுமட்டுமின்றி, பாக்டீரியா தொற்றுக்களை அகற்றி, உடல் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

உடலில் உள்ள வெப்பத்தை அகற்ற உதவுவதுடன், உள்ளுறுப்புகளில் உண்டாகும் புண்களையும் ஆற்றுகிறது.

நன்னாரியை நீரில் ஊற வைத்து அல்லது வேகவைத்து வெயில் காலங்களில் சாப்பிட்டு வர, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம்.

20 கிராம் நன்னாரி வேரை இடித்து, இரண்டு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆறியதும் பருகி வந்தால் ரத்தம் சுத்தமாகிறது.

நீடித்த முகப்பரு, அரிப்பு, ஒவ்வாமை மற்றும் கரப்பான் போன்றவை நீங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

நன்னாரியில், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி டியூமர் தன்மை உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.