இதய தமனிகளை தாக்கும் கவசாகி!

குழந்தைகளை தாக்கும் நோய்களில், 'ருமட்டாய் ஆர்த்ரைடீஸ்' முதலிடத்திலும், 'கவசாகி' நோய் அடுத்த இடத்திலும் உள்ளது. இந்நோயை உறுதிசெய்ய எவ்வித பரிசோதனைகளும் இல்லை. அறிகுறிகளை வைத்தே சிகிச்சை தரப்படும்.

கவசாகி நோய் என்பது சிறிய, நடுத்தர அளவுடைய ரத்தக் குழாய்களில் அழற்சியை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் நிணநீர் குழாய்கள், வாய், மூக்கு, தொண்டையில் உள்ள பிசுபிசுப்பான மியூக்கஸ் அடுக்கிலும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். கைக்குழந்தைகள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

கவசாகி நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆட்டோ இம்யூன் டிசாடர் எனப்படும் நம் நோய் எதிர்ப்பு சக்தியால் உண்டாகும் பிரச்னையாக இருக்கலாம்.

கவசாகி நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தொண்டைப்புண் என்று நினைத்து, பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகள், தட்டம்மைக்கான சிகிச்சைகள் தரப்படுகிறது.

கவசாகி நோய் உறுதியான 10 நாட்களுக்குள், 'ஐவிஜி' எனப்படும் 'இம்யூனோ குளோபலின்' என்ற உயிரி மருந்தை நரம்பு வழியாக செலுத்தினால், இதயத் தமனியில் எற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.

இதயத் தமனிகளில் பாதிப்பை உறுதி செய்ய எக்கோ பரிசோதனை செய்யலாம். இயல்பாக இருந்தால், இரண்டாவது வாரத்தில் ஒருமுறையும், ஆறு - எட்டு வாரத்தில் ஒருமுறையும் எக்கோ பரிசோதனை அவசியம்.

கவசாகி நோயை ஆரம்ப அறிகுறிகள் வாயிலாக கண்டறிந்து, சிகிச்சை செய்தால், இதயத் தமனியில் அழற்சி போன்ற தீவிர பாதிப்புகளை தடுக்க முடியும்.