நடுத்தர வருவாய் நாட்டு மக்களுக்கு ஹார்ட் அட்டாக் அதிகம் வர இதுதான் காரணமா?

இன்றைய காலகட்டத்தில் ஹார்ட் அட்டாக் காரணமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உயிரிழக்கின்றனர். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் உலகளவில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

முன்பு வயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இளம் வயதினரும் பாதிக்கப்படுவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்த ஆய்வில், 55 நாடுகளில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் ஹார்ட் அட்டாக் தான் முக்கிய காரணியாக உள்ளது. 37.4 % பேர் இதனால் உயிரிழக்கின்றனர்.

1990 முதல் 2021 ல் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழப்பவர்கள் விகிதம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் 50 % குறைந்துள்ளது. ஆனால், மத்திய வருவாய் நாடுகளில் 12 % மட்டுமே சரிவை சந்தித்துள்ளது.

இந்த நாடுகளில் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழப்பவர்களில் 46 % பேர் ஆண்கள். 53 % பெண்கள். ஆனால், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஆண்கள் 30 % ஆகவும், பெண்கள் 34 % ஆகவும் உள்ளது.

மத்திய வருவாய் கொண்ட நாடுகளில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25.4 % பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். அதிலும் 40.9 % ஆண்கள்.

இந்நாடுகளில், ஆண்கள் 40 % மற்றும் பெண்கள் 40 % பேர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வளர்ந்த நாடுகளில் பெண்கள் 30 % பேர் ஆண்கள் 40 % பேர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நீரிழிவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மத்திய வருவாய் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது.

இங்கு, போதிய மருத்துவ வசதிகள் கிடையாது. போதிய நிபுணர்கள் மற்றும் பாதிப்பை முன்னரே கண்டுபிடிப்பதற்கான சிகிச்சை முறைகளும் குறைவாக உள்ளன.

இதற்கு நேர்மாறாக அதிக வருமானம் கொண்ட நாடுகள் உள்ளன. அங்கு பல இதயவியல் துறை நிபுணர்கள் பணியில் உள்ளதுடன், தரமான சிகிச்சையும் அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயிரிழப்பவர்களில் 24.8 % இதனால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக இளம் வயதினர் அதிகமுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மரபணு மட்டுமின்றி மாறிவரும் வாழ்க்கை முறையும் காரணங்களாகும்.

எனவே, 18 வயதுக்கு முன்னரே பரிசோதனை மேற்கொள்வதுடன், ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க உதவும் முறைகளை பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.