லிவர் சிரோசிஸ் காரணமும், பாதிப்பும்!
அளவிற்கு அதிகமாக மது அருந்தினால், 'லிவர் சிரோசிஸ்' எனப்படும், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் என பொதுவாக கூறப்படுகிறது.
நம்முடைய உணவுப் பழக்கத்தில் எற்பட்டுள்ள மாற்றத்தினால், மது பழக்கம் இல்லாதவர்களுக்கும், 'பேட்டிலிவர்' கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது.
இந்த வீக்கம் நீண்ட நாட்கள் அப்படியே இருந்தால், செல்கள் மெதுவாக அழிந்து, தழும்புகள் உருவாகும். முடிவில், சிரோசிஸ் ஏற்படும். இது நாளடைவில், கேன்சராக மாறவும் வாய்ப்புகள் அதிகம்.
கல்லீரல் கோளாறுகள் ஏற்பட்டால், அறிகுறிகள் வெளியில் தெரியாது. கல்லீரல் தன் செயல்பாட்டை பெருமளவு இழந்த பின்பே, பாதிப்புகள் வெளியில் தெரிய வரும்.
இதற்கு, குறைந்தது, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே, தீர்வு என்ற நிலையிலேயே, சிரோசிஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது.
கல்லீரலைப் பொருத்தவரை, வருமுன் காப்பதே சிறந்த வழி. துவக்கத்திலேயே கண்டறிந்து, நிரந்தரக் கோளாறு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை செய்ய வேண்டும்.
மதுவுக்கு அடிமையாவதைத் தவிர, செயற்கை ஊட்டங்கள் சேர்க்கப்பட்ட, பதப்படுத்திய உணவுகள், உடற்பயிற்சியின்மை, மரபியல் ரீதியிலான கல்லீரல் கோளாறுகளும், அதிக அளவில் இளைஞர்களை பாதிக்கிறது.
இந்தப் பிரச்னைக்கு, தற்போது, எந்த சிகிச்சையும், மருந்துகளும் இல்லை. உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி, உடல் எடையை சீராக வைத்திருப்பது, ஆகியவை மட்டுமே தீர்வு.