முதுமைக்கு கட் ஆப் வயது 55.. எப்படி கையாளலாம்!
முதுமை என்பது நாம் அனைவரும் நினைப்பது போன்று, 70 வயதிற்கு மேல்தான் என்றாலும், உண்மையில் முதுமையின் ஆரம்பம் 55 வயதிலேயே துவங்கி விடுகிறது.
அதுவரையிலும் எந்தவித உடல் பிரச்னைகளும் இல்லாமல் இருந்தாலும், 55 வயதில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, ஆர்த்ரைடீஸ், நுரையீரல் தொற்று என்று நம் வாழ்க்கை முறைக்கு ஏற்ப வரலாம்.
ஏன் 55 வயதில் உடல் கோளாறுகள் வர ஆரம்பிக்கிறது என்றால், அது தான் முதுமையின் முதல் படி. இதற்கு, குறிப்பிட்டு சொல்லக்கூடிய காரணம் எதுவும் இல்லை.
நம் ஆயுட்காலம், வாழ்க்கை முறையின் அடிப்படையில், முதுமை துவங்கும் 55 வயதில் தான் உடல் பிரச்னைகள் வருகின்றன என்பதை உறுதி செய்துள்ளனர்.
55 வயதிற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்திருந்தாலும், 55 - 65 வயதில், ஆண்டிற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
அதற்கு மேல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்தால் போதும். 30 - 40 வயதில் சாப்பிட்ட உணவு, வாழ்க்கை முறையை 55 வயதில் தொடர முடியாது.
உடலும், மனமும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்காது. வயதிற்கு ஏற்ப உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டியதும் முக்கியம்.