மனிதர்களை மட்டுமல்ல.. கால்நடைகளையும் பாதிக்கும் ரேபிஸ்..!
'ரேபிஸ்' நோய் மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளையும் பாதிக்கும் என்பதால் ஆடு, மாடு, குதிரை, பூனைகளை நாய் கடித்தால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர் கால்நடை டாக்டர்கள்.
வீட்டு நாய்களுக்கு வெறி நாய் கடித்து அறிகுறி தோன்ற 10 நாட்கள் முதல் 6 மாதங்கள் ஆகும்.
உணவு உட்கொள்ளாமல் நாய் அமைதியின்றி காணப்படும். நுரையுடன் எச்சில் தொடர்ச்சியாக வடியும். கால்கள் செயலிழந்த நிலையில் 5 முதல் 7 நாட்களில் நாய் இறந்து விடும்.
வெறிநாய் பூனையை கடித்தால், பூனை அதிக கோபத்துடன் வெறிபிடித்த நிலையில் இருக்கும். நாய் மற்றும் மனிதர்களை திடீர் என தாக்க முயற்சிக்கும்.
ஆடு, மாடுகளில் நாய் கடித்து அறிகுறிகள் தோன்ற 10 நாட்கள் முதல் 6 மாதங்கள் ஆகும். அருகில் செல்பவர்களை முட்ட வரும். 'ரேபிஸ்' நோய் அறிகுறிகள் உள்ள மாட்டின் பாலை கறக்கக்கூடாது.
ஆடுகள் தொடர்ச்சியாக கத்தும். கல், மண், கட்டைகளுடன் தன் உடம்பு மற்றும் வாலை தானே கடிக்கும். குதிரைகளில் அறிகுறிகள் தோன்ற 12 நாட்கள் ஆகும்.
வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளுக்கு ஆண்டுதோறும் 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். தெரு நாய்களை தத்து எடுத்தாலும் முதலில் இந்த தடுப்பூசியை செலுத்த வேண்டும்.