தீவிரம் காட்டும் புளூ தொற்று
வழக்கமாக மழைக்காலம் துவங்கும் போது, புளூ தொற்று பரவுவது வழக்கம். சுருக்கமாக, புளூ (இன்புளூயன்சா) என்பது ஹெச்1என்1, ஹெச்2என்2 வைரஸ் தொற்றுகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் புளூ தொற்று பரவ ஆரம்பிப்பது வழக்கமாக இருப்பினும், இந்தாண்டு தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளது.
தொற்று பாதித்த பலரும், குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கனவே இதயம் மற்றும் நீரிழிவு போன்ற பல பாதிப்பு உள்ளவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் அறிகுறிகள் கொரோனா வைரஸ் போன்றே உள்ளது. இது மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரசா என்று தெரியவில்லை.
பல நாடுகளில், 'எக்ஸ்ஈசி' என்ற கொரோனா வகை பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனையில் ஹெச்1என்1 பாதிப்பு அதிகமுள்ளதால், 'டேமி புளூ' மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன; இது 7 நாட்கள் கொடுத்தால் சரியாகி விட வேண்டும்.
இருமல், சளி, காய்ச்சல் இருந்தால், மாத்திரை சாப்பிட்டவுடன் ஒரே நாளில் காய்ச்சல் சரியாகி விடுகிறது. இருமல் 3 வாரங்கள் வரை இருக்கிறது.
தீவிர தொற்று உள்ளவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, வென்டிலேட்டர், செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. காரணம், தற்போது பரவும் புளூ வைரசின் வீரியம் அதிகமாகவுள்ளது.
சைனஸ், அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு, வழக்கமாக வரும் அலர்ஜியா? புளூ தொற்றா? என புரியாமல் குழப்பம் ஏற்படும். அதனால், தீவிரம் அடைந்த பின் தான் ஆலோசனை பெறுவர்.
எனவே, குளிர்காலம் ஆரம்பிக்கும் வரை புளூ பரவல் இருக்கும் என்பதால் அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பு தரும். சமீபத்தில் புளூ பாதிப்பு வந்தவர்களுக்கு இது தேவைப்படாது.