நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம்
குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் தான் பாதிப்பு என்பது மாறி, கடந்த சில ஆண்டுகளாக, 'டெங்கு' வைரஸ் பாதிப்பு அவ்வப்போது உள்ளது.
டெங்கு காய்ச்சல் என்றவுடனேயே, ஒருவித அச்ச உணர்வு அனைவருக்கும் வருகிறது; இது தேவையில்லை.
டெங்கு வந்தவர்களில், 75 சதவீதம் பேருக்கு, அது வந்த சுவடே தெரியாமல், தானாகவே மறைந்து விடும்.
காய்ச்சல், தலைவலி, கண் வலி, உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட 25 சதவீதம் பேரில், 1 சதவீதத்திற்கும் குறைவாகவே டெங்கு அறிகுறிகள் தீவிரமாகலாம்.
இவர்களில் சிலருக்கு, தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை; வெகு சிலருக்கே ஆபத்தான நிலை வருகிறது.
வழக்கமாக இருக்கும் அறிகுறிகளை விடவும், தீவிர காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, உடல் வலி, ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
ஈறுகளில் ரத்தம், சிறுநீர், மலத்தில் ரத்தம் வருவது, நினைவு இழப்பது, சுவாசிப்பதில் சிரமம் போன்றவையும், டெங்குவின் தீவிர அறிகுறியாக இருக்கலாம்; உடனடியாக, டாக்டரின் உதவி பெற வேண்டியது அவசியம்.
டெங்குவிற்கு 'சப்போர்டிவ் ட்ரீட்மென்ட்' என்ற ஆதரவு சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும். சருமத்தில் தடிப்புகள், வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு என, பிரச்னையின் தீவிரத்திற்கேற்ப சிகிச்சை இருக்கக்கூடும்.
டெங்கு பாதிப்பு இருந்தால், பழச்சாறு, சூப் என்று நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவை தொடர்ந்து தர வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம்.