நீரிழிவால் பாதிக்கப்படும் இளைஞர்கள் இருமடங்கு அதிகரிப்பு... ஆய்வில் அதிர்ச்சி !

சர்வதேச நீரிழிவு பாதிப்பு தினம் இன்று (நவ.,14) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இதன் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பிரபலமான 'தி லான்சேட் ஜார்னல்' இதழ், கடந்த 30 ஆண்டுகளில் நீரிழிவு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இதில், அதிகரித்து வரும் மக்கள் தொகையில் 80 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 1990ம் ஆண்டுகளில் 20 கோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்திருப்பதும், வளர்ந்த நாடுகளில் பாதிப்பு அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்சுலின் குறைபாட்டினால் இளம் வயதிலேயே நீரிழிவால் பாதிக்கப்படுவதும், இன்சுலின் உணர்திறன் இழப்பால், நடுத்தர மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.

வளர்ந்த மற்றும் ஏழை நாடுகளில் நீரிழிவு பாதிப்பு அதிகம் தென்படுகிறது. இந்தியாவிலும் பாதிப்பு பெருமளவில் உள்ளது. 44 கோடி இளைஞர்கள் இந்த பாதிப்பிற்கு முறையான சிகிச்சை பெறுவதில்லை.

அண்டை நாடான பாகிஸ்தானில் 3ல் ஒரு பங்கு பெண்கள் இதற்கு ஆளாகின்றனர். இது 1990ல் 10ல் ஒரு பங்கினரே பாதிக்கப்பட்டிருந்தனர்.

சவுதி அரேபியாவில் மட்டும் 5 முதல் 10 சதவீத இளைஞர்கள் நீரிழிவு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, உலகளவில் நீரிழிவால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 1990ல் 7 % ஆக இருந்ததாகவும், 2022ல் அது 14 % ஆக அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.